பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும்.ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்றும் மறக்க முடியாதவை.கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை படங்களில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம்.சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள நாடகங்களைத் தந்தவர்.மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதனுக்காகவே எழுதிய நாடகங்கள் அன்புள்ள அப்பா, ஊஞ்சல், அப்பாவின் ஆஸ்டின் கார்... இன்னும் பல.சமீப காலமாக இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் அதிகமானதன் காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு நினைவு தப்பியது. மாலை 4 மணிக்கு அவர் மரணமடைந்தார். தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு பூர்ணம் விஸ்வநாதனின் மரணம்.
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment