ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பூர்ணம் விசுவநாதனுடனான நட்பு நீடித்தது. நட்பு என்றால் தினமும் ஒருதடவை நேரிலோ அல்லது போனிலோ ‘என்னையா, சௌக்கியமா?’ என்று குசலம் விசாரிக்கும் சினேகிதமல்ல. வருடத்திற்கொரு முறை சந்தித்துக்கொண்டாலும், முகமும் கண்களும் மலர, அவருக்கே சொந்தமான அந்தச் சிரிப்புடன், ‘என்ன மணி, எப்படியிருக்கேள்?’ என்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்கும்போது, அவரை நேற்றுத்தான் சந்தித்தது போலிருக்கும். இடைவெளியைக் கடந்த நட்பு அது. காம்பஸ் வைத்து வரைந்ததுபோல் வட்ட முகம். கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சிரிக்கும் கண்கள். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இதே அனுபவம் இருந்திருக்கும். போன மாதம் மறைந்த திரு.பூர்ணம் விசுவ நாதனைப்பற்றிச் சில நினைவுகளை உயிர்மை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.
தில்லி ஆல் இந்தியா ரேடியோ செய்திப் பிரிவில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராகப் பலவருடம் பணி புரிந்தார். நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் இந்தியா சுதந்திரமடைந்ததைத் தமிழில் உலகுக்குச் சொன்னவர். இவருடன் பணியாற்றிய ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை), தர்மாம்பாள், வெங்கட்ராமன், நாகரத்தினம் இவர்களது குரல்கள் - தினமும் காலை ஏழே கால் மணிக்கு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன் . . .’ செய்தியைப் பாதியிலிருந்து கேட்கத் தொடங்கும் நம்ம ஊர் பெரிசுகள் குரலை வைத்தே, ‘ஓ இன்னிக்கு பூர்ணமா?’ என்று கேட்குமளவிற்கு, டி.வி. வராத அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிச்சயமான குரலாக இருந்தது. கையில் ரிமோட்டுடன் 150 சானல்கள் கொண்ட இடியட் பாக்ஸ் இல்லாத காலத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு, காலையில் 5,30 மணிக்கு (தென்கிழக்காசிய சேவை), காலை 7.15, மதியம் 1.30, மாலை 7.15 மணிக்கு இவர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை! ஜனாதிபதியோ முக்கியமான மத்திய அமைச்சரோ இறந்தாலும், அந்தச் செய்திக்காக நாம் காத்திருக்க வேண்டும். இப்போதைய சானல்களில் Breaking News என்ற சாக்கில் அரைத்த மாவையே அரைப்பது போல் 24 மணிநேரமும் ‘செய்திகளை உடைப்பது’ போன்ற வியாபார உத்திகள் அப்போதைய அப்பாவி ஆல் இந்தியா ரேடியோவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் தர்மாம்பாள் இலங்கைத் தமிழ் ரசிகர்கள் அழைப்பில், தில்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கே போய்வந்தவர்! போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப் பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப் பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார். யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிரு பேசுவரன் என்பதன் சுருக்கம். பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளி நாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருந்த உமாசந்திரன் -இவர் சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை. உமாசந்திரனின் கதையைத் தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார். விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division தினமும் காலை 5.30-6.30மணிக்கு ஒலிபரப்பும் தென்கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தார். தில்லியில் அவர் மறையும் வரை எனக்குக் குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர்த் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது. ‘....அடுத்ததாக வெள்ளவத்தை கார்த்திகேசு, கோலாலம்பூர் சிவசாமி, யாழ்ப்பாணம் சங்கரலிங்கம் . . . பினாங்கு பீர் முகம்மது . . . ரங்கூன் ரமாதேவி ஆகியோர் விரும் பிக்கேட்ட பாடல் 'தூக்கு தூக்கி’ படத்திலிருந்து டி.எம். சௌந்தரராஜன் பாடியது . . .’ என்று அவரது கணீரென்ற குரல் ஐம்பதைத் தாண்டிய அ. முத்துலிங்கம் போன்றோருக்கும் நினைவிருக்கலாம்.
1955-ல் நான் தில்லி போன இரு வாரங்களில், சௌத் இந்தியா கிளப் ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் பூர்ணம் எழுதி நடித்த ஓரங்க நாடகம் இடம் பெற்றிருந்தது. நாடகத்திற்குப்பிறகு 'விலாசமில்லாத’ என்னை அறிமுகப்படுத்திக்கொண் டேன். பிறகு ஒரு நாள் ரேடியோ ஸ்டேஷனில் சந்தித்தபோது, ‘மணி, அடுத்த நாடகத்தில் உங்களுக்கும் ஒரு ரோல் இருக்கு. ரிகர்ஸலுக்கு வந்துடுங்க’ என்றார். நானும் அவர் நடிக்கும் ஓரங்க நாடகங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். தில்லியில் தமிழ் நாடகத்திற்கென்றே தனி அமைப்புகளாக எனது தட்சிண பாரத நாடக சபாவும், பூர்ணம் பங்குபெற்ற சௌத் இந்தியன் தியேட்டர்ஸும் பின்னால்தான் தொடங்கப்பட்டன.
நான் தில்லி போன மறுமாதமே AIR External Services Division தமிழ்ப் பிரிவு தினமும் காலை 5.30 முதல் 6.30 வரை ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ரேடியோ நாடகங்களில் பங்குபெற கான்ட்ராக்ட் வர ஆரம்பித்தது. மாதத்தில் ஐந்தாறு நாடகங்களில் கலந்துகொள்வேன். தில்லி போகுமுன்னரே திருவனந்தபுரம் திருச்சி ரேடியோ நிலையங்களில் ஆடிஷனில் தேர்ந்து நடித்து வந்தவன். அப்போதெல்லாம் ரிக்கார்டிங் வசதி கிடையாது. செய்தி வாசிப்பதுபோல நாடகங்களும் லைவ் தான். அந்த நாடகங்களை பூர்ணம் லட்சுமி, தர்மாம்பாள், என். ஆர். ராஜகோபாலன் போன்றவர்கள் இயக்குவார்கள். தில்லி குளிர்காலத்தில் அதிகாலை மூன்றுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, வெடவெட குளிரில் குளித்துத் தயாராகி, வாசலில் அழைத்துப் போக வரும் AIR Van அடிக்கும் ஹாரனுக்காகக் காத்திருக்கவேண்டும். உலகமே நிச்சிந்தையாகத் தூங்கும் நேரமது. போகும் வழியில், பூர்ணம் லட்சுமியையும், வினே நகரிலிருந்த பூர்ணத்தையும் மற்ற நடிகர்களையும் ஏற்றிக்கொள்ளும். வழியில் அண்ணன்-தங்கை பேசிக் கொள்வதைக் கேட்டால், அவர்கள் பாசம் இழையோடும். ரேடியோ ஸ்டேஷன் போகும்வரை லட்சுமியின் 'கொல்'லென்ற சிரிப்பு (ஆமாம், இதென்ன சிரிப்பு?!) தொடரும். இந்த ஒருமணிநேர நிகழ்ச்சி 10 நிமிட தமிழ்ச்செய்தியுடன் தொடங்கும். அதனால் தன் மேசையில் தயாராக வைத்திருக்கும் ஆங்கிலப் பிரதியைத் தமிழில் மொழிபெயர்த்துத் தயாராக்கத் தமிழ் யூனிட்டை நோக்கி ஓடுவார் பூர்ணம்.
முன்பே ஒருதடவை வந்து ஒத்திகை பார்த்திருப்பதால், நாங்கள் அவசரமில்லாமல் ஸ்டுடியோவுக்குப் போவோம். சரியாக ஐந்தரை மணிக்கு முகப்பு அறிவிப்பு முடிந்ததும் அடுத்த ஸ்டுடியோவிலிருந்து, விசு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்..’ என்று தன் கணீரென்ற குரலில் ஆரம்பிப்பார். அதற்குமுன் நாங்கள் இடையிலுள்ள கண்ணாடிச்சுவர் வழி கட்டைவிரலை உயர்த்தி ‘Best of Luck!’ சொல்லுவோம். நாடகத்துக்குத் தேவையான பிரதிகளை காப்பி எடுத்து Copywriter பஞ்சாபகேசன் தயாராக வைத்திருப்பார். இவரைத் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பஞ்சாபகேசன் என்ற பெயரிலல்ல. இவர் தான் நடிகர் அர்விந்த் ஸ்வாமியின் தந்தையும், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் அப்பா வேஷத்தில் நடிப்பவருமான டில்லி குமார் அவர்கள். தில்லி மேடையில் பூர்ணத்துடன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கடிகாரத்தின் மேல் இருக்கும் ON AIR என்ற சிவப்பு விளக்கு எரியும்போது, உலகத்தில் அனைவருமே தூக்கத்தை மறந்து, என் நாடகத்தைக் கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்வேன். ரேடியோ நாடகத்தில் பார்த்துப் படிப்பதால், வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவவிடுவது ஒரு கலை. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள, என் நேரத்தை வேலை செய்யும் கம்பெனிகளுக்கும், அது சம்பந்தமான பிரயாணங்களுக்கும் தாரை வார்த்துக்கொடுக்கும் வரை, தில்லியில் ஆயிரம் ரேடியோ நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவை என் தில்லி வாழ்க்கையில் ரம்மியமான நாட்கள்.
நாடகம் முடிந்து, Duty Officer Room-க்கு வந்து தயாராக வைத்திருக்கும் நமது காசோலைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் ரூமில் வைத்திருக்கும் நாலைந்து ஸ்பீக்கர்களிலிருந்து அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, ஒரியா, பெங்காலி நிகழ்ச்சிகள் மொழி புரியாத ஓர் ஒலிக்கலவையாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை நாம் ஒருமணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தால், உத்தரவாதமாக பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவர் நாள் பூராவும் கேட்டாகவேண்டும். அவர் ‘Duty!’ டூட்டி ஆபீசரல்லவா? மற்றவர்களுக்கெல்லாம் ரூ.15 எனக்கு மட்டும் ரூ. 20. ஏனென்றால் நான் 1948-லேயே திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷனில் ஆடிஷன் ஆன ‘ஏ’ கிரேடு ஆர்ட்டிஸ்ட். மற்றவர்கள் வெறும் கையெழுத்து போட்டு காசோலையை வாங்கிக் கொள்வார்கள். எனக்கு மட்டும் ரூ. 20 என்பதால் ரசீதில் ஒரு அணா ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்போடவேண்டும். ஒரு அணா (ஆறு பைசா) இல்லையென்றால், உன் சொத்தை விற்றாவது ஓரணா கொண்டுவா, பிறகுதான் செக் தருவேன் என்பார்கள். சில சமயம் பாக்கெட்டில் சில்லறையில்லாமல், நியூஸ் ரூமுக்கு ஓடிப்போய் பூர்ணம் விசுவநாதனிடம் ஒரு அணா கடன் வாங்குவேன். (இந்தக் கடனை கான்டீனில் காபி வாங்கிக் கொடுத்து கழித்துவிடுவேன்.) இந்த ரூ. 20-க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரைத் துணைக்குக் கூப்பிட்டு For and on behalf of President of India Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார். இந்த இருபது ரூபாயைப் பணமாகக்கொடுக்க நம் அரசாங்கத்தின் ரூல்ஸ் இடம் தராது. இன்னும் நாம் மாறவில்லை. No body can beat our Indian Bureaucray. அமெரிக்கா போய்விட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி தன் பென்ஷன் அரியர் ஸுக்கு விண்ணப்பித்தபோது, ‘ஆறு மாதத்துக்கு முன்னால் உயிரோடு இருந்தீர்கள்’ என்பதற்கான சான்றிதழுடன் நேரில் வரவும்’ என்றது தில்லி பல்கலைக்கழகம்!
ஏழுமணி அளவில் AIR Canteenல் காத்திருப்பேன். செய்தி வாசிப்பு தடங்கலின்றி நிறைவேறியதாக ஒரு ரிப்போர்ட் எழுதி டூட்டி ஆபீசரிடம் கொடுத்துவிட்டு பூர்ணமும் வருவார். அந்தவேளையில் கான்டீன் காலியாகவே இருக்கும். அங்கே காலைவேளையில் சுடச்சுட மெதுவடை கிடைக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னிக்குப்பதிலாக, வெள்ளைப் பூசணிக்காயுடன் புளிகாரம் உப்பு கலந்து அரைத்த ஒருவகை ஸாஸ்தான் பாட்டிலில் வைத்திருப்பார்கள். ஒருநாள் காலை இருவரும் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இருபது வயதுள்ள ஒடிசலான ஓர் இளம் பெண்மணி கையில் காபி கப்புடன், ‘Can I join you?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் எங்கள் எதிரில் உட்கார்ந்தார். சரளமான ஆங்கிலத்தில், பூர்ணத்தைத் தெரியுமென்றும் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார். தன் பெயர் ஆங் ஸான் ஸூ சி என்றும் தில்லியில் தங்கிப் படிப்பதாகவும், காலை நேரங்களில் வெளிநாட்டுச்சேவை ஒலிபரப்பில் பர்மியமொழிச் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ரேடியோ ஸ்டேஷனில் பர்மீஸ் யூனிட்டைத் தாண்டித்தான் தமிழ் யூனிட்டுக்குப் போக வேண்டும். பிறகு அதே கான்டீனில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் முகமன் சொல்லிக்கொள்வோம். ஒருமுறை, பர்மியரான அவர் இந்தியாவில் தங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார். வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் Foreigner's Registration Office-ல் என் நெருங்கிய நண்பன் உயர் பதவியில் இருந்ததால், என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, அவனைப் போய்ப் பார்க்கச்சொன்னேன். அடுத்தவாரம் பார்க்க நேர்ந்தபோது, ஓடி பக்கத்தில் வந்து, என் நண்பன் உதவியால் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் கிடைத்துவிட்டதாக நன்றி சொன்னார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர்தான் 1991-ம் ஆண்டு சமா தானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பர்மியப் போராளி Aung San Suu Kyi. 1990-ல் மிலிட்டரி சர்வாதி காரத்தை எதிர்த்து, சமாதானப் போர் நடத்தி, வீட்டுச்சிறையிலிருந்த படியே, பிரசாரத்துக்குக்கூடப் போகாமல், தன் கட்சியான Natioonal League of Democracy-க்கு 80% இடங் களைத் தேடிக்கொடுத்தவர். ஜன நாயகத்தில் நம்பிக்கையில்லாத பர்மிய மிலிட்டரி சர்வாதிகாரம் தேர்தலை, null and void என்றுகூறி ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. உலக வல்லரசுகளும் பத்திரிகை களும் வற்புறுத்தியும்கூட, அவரை ஸ்வீடனுக்கு நேரில் போய் நோபல் பரிசைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. 1989-லிருந்து இன்றுவரை - சில மாதங்கள் தவிர - பர்மிய சர்வாதிகாரம் இவரை வீட்டுக்காவலிலேயே வைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய ஜனநாயக வல்லரசான நாம், மௌனமாகப் பார்த்தும் பார்க்காமலிருக்கிறோம். இல்லை.... ஆரம்பத்தில் 1969-ல் Ghungi Gudiya (பேசாத பொம்மை) என்று கேலியாகவும் பிறகு எண்பதுகளில் The only Man in her entire Cabinet என்றும் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி போல் இன்னொருவர் வரக் காத்திருக்கிறோமா?
நான் சென்னை வந்தபிறகு, 2002-ல் ஸூ சி அம்மையாரை காவலிலிருந்து விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் வலுத்து வந்தது. தினமும் அவர் பெயர் தினசரிகளில் தென்பட்டது. செய்திச்சானல்களில் அடிக்கடி வருவார். அப்போது ஒரு நாள்திரு. பூர்ணத்தைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அம்மையாரை நாம் சந்தித்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு நினைவில்லை. விளக்கிச் சொன்னவுடன் மகிழ்ச்சியோடு, ‘அப்போ நாம ஒரு நோபல் ப்ரைஸ் வின்னருடன் கைகுலுக்கியிருக்கிறோம்!’ என்றார். நான், ‘இல்லை. In anticipation of her getting Nobel prize, நாம 25 வருஷம் முன்னாடியே அட்வான்ஸா கைகுலுக்கி விட்டோம்’ என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு சிரித்தார்.
தில்லி சௌத் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், நாலுவேலி நிலம், போலீஸ்காரன் மகள், தேவனின் கோமதியின் காதலன், ரமேஷ் மேத்தாவின் அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். கோமதியின் காதலனில், கோவிலுக்குப் போய்விட்டு அர்ச்சனைத்தட்டுடன் வீட்டுக்குத் திரும்பும் பூர்ணம், தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது அர்ச்சனைத் தட்டிலிருக்கும் அட்சதைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். உடைத்த தேங்காய்மூடியை நகத்தால் கிள்ளுவார். This is the sopontaneous use of Set Properties by a Performer! யதார்த்த நடிப்பில் ஊறியவருக்குத்தான் இது கைவரும். தேர்ந்த நடிகருக்கான உத்தி. இதை ஒரு பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறேன்.
தில்லியில் அடிக்கடி நடக்கும் ‘யாத்ரிக்’ குழுவின் ஆங்கில நாடகங்கள், சம்புமித்ரா, ஷ்யாமானந்த் ஜலான், சத்யதேவ் தூபே, உத்பல் தத் போன்றவர் நாடகங்களுக்கோ, இப்ராஹிம் அல்காஸியின் என். எஸ்.டி நாடகங்களுக்கோ அவர் வந்ததேயில்லை. கூப்பிட்டால், ‘டூட்டி இருக்கு, மணி’யென்று தப்பித்துக்கொள்வார். அவைகளைப் பார்த்து புதிதாகத் தெரிந்துகொள்ள அவருக்கு அவசியம் இருந்ததில்லை.
எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு! அவர் 'பூர்ணம் தியேட்டர்ஸ்' தொடங்கியபின், தில்லிக்கு நாடகம் போட வந்திருந்தார். முதல் நாடகம் ‘தனிக்குடித்தனம்’. சென்னையிலிருந்து செட் சாமான்கள் ஏற்றிவந்த லாரி நாக்பூர் அருகே ரிப்பேராகிவிட்டதால், அவசர அவசரமாக எங்கள் D.B.N.s குழுவின் செட் உபகரணங்களைக் கொண்டு போய் மேடையமைப்பு செய்து கொடுத்தது ஞாபகம் வருகிறது.
எங்கள் நட்பு இறுக்கமானது அவரது சகோதரி லட்சுமி இறந்தபோது. திருமணத்தில் நாட்டமில்லாத அவர் தனியாக மோதி பாக்கில் ஓர் அரசாங்கவீட்டில் குடியிருந்தார். சென்னையிலிருந்த பூர்ணத்துக்குத் தங்கையின் மரணச் செய்தியை அறிவித்ததே நான் தான். அவர் தில்லி வரும்வரை காத்திருந்து, நிகம்போத் சுடுகாட்டுக்கு சடலத்துடன் போய், கடைசிவரைகூட இருந்தேன். கிட்டத்தட்ட நவம்பர் 2007 உயிர்மையில் நான் பதிவு செய்த ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையில் எழுதியிருந்ததையெல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். காரில் திரும்ப வரும் போது, 'மணி, நீங்க இவ்வளவு உதவியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே. லட்சுமியின் ஆத்மா உங்களை வாழ்த்தும். உங்களுக்கு சுடுகாட்டிலேயும் நெறைய நண்பர்கள் இருக்காங்களே’ என்றார். ‘நான் கடைசியா இங்கே தானே வந்தாகணும். அப்போ என்னை ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்களே' என்ற பதிலுக்கு, அவர் உரக்க ‘No silly Joikes’ என்று சொல்லி என் வாயைப் பொத்தினார். பிறகு அவர் குடியிருந்த வீட்டை காலிசெய்து சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி, சென்னையில் பூர்ணம் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உயிர்மையில் நான் தில்லி நிகம்போத் சுடுகாட்டைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். ‘நான்தான் நேரிலேயே பார்த்திருக்கேனே. You are a great person’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டையும் கூடவே தந்தார்.
என்னைப்போன்ற இவரது தில்லி நண்பர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயம் இவருக்கும் இசை விமர்சகர் சுப்புடுவுக்குமிடையே இருந்த தீராப்பகை. அதன் காரணகாரியங்களை இப்போது ஆராய வேண்டாம். தில்லியில் நடந்த சில சம்பவங்கள் இவரை அளவுக்கதிகமாகக் காயப்படுத்திவிட்டன. பூர்ணம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததற்கு அவையும் முக்கியமான காரணங்கள். எங்கள் சமரச முயற்சிகள் கடைசிவரை பலனளிக்கவேயில்லை.
தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்குச் சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து தன்னையும் கௌரவப்படுத்திக்கொண்டது.
பலருக்குத்தெரியாத விஷயம் பூர்ணம் ஒரு தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது. ஐம்பது அறுபதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுவந்த ‘சுடர்’ ஆண்டு மலரில் இவரது ஓரங்க நாடகங்கள் தவறாமல் இடம்பெறும். சென்னை பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலரில் எழுதுவார். இவரது ஓரங்க நாட கங்களில்தான் என் தில்லி நாடக வாழ்க்கை தொடங்கியது. சென்னைக்கு வந்தபின் ஏனோ எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார். அதனால் தமிழுக்குத்தான் நட்டம்.
என் நண்பர் மரபின் மைந்தன் சொன்னது:
தமிழிலக்கிய மேடைகளிலும் பூர்ணம் விசுவநாதன் பலமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.
ஒரு விழாவில் பார்வையாளர் வரிசையில் அவர் வந்து அமர்ந்த போது, பேச்சாளர் ஒருவர் சொன்னார்: "கொழுக்கட்டை மாதிரி இருக்காரே இவர் யார்னு விசாரிச்சேன் . . . பூர்ணம்னு சொன்னாங்க! அதுசரி, பூர்ணம் இருந்தாத்தானே கொழுக்கட்டை." தமிழக அரசின் சுற்றுலா சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் பூர்ணம் விசுவநாதன் ஆலோசகராக இருந்தார். அதன் விழா ஒன்று நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். வீடியோ வெளிச்சத்தில் மேடையில் இருப்பவர்களுக்குக் கண்கூசிற்று. பேச்சாளர் கண. சிற்சபேசன் கூறினார்: "இங்கிருந்து பார்த்தா பூர்ணம் மாதிரித் தெரியுது, ஆனா பூரணமாத் தெரியலை."
'பாரதி’ படப்பிடிப்பின்போது, நடிகர்கள் தேர்வு எனக்களிக்கப் பட்ட பணிகளில் ஒன்று. டைரக்டர் ஞான. ராஜசேகரன் பூர்ணத்தைப் பார்த்துவரச் சொன்னார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பூர்ணம், கண் ஆபரேஷனுக்குப்பிறகு அதிக வெளிச்சம் பார்த்தால் கண் கூசுகிறது என்பதால் பாரதியில் நடிக்க இயலாதென்று வருத்தம் தெரிவித்தார். He has acted in some good, bad and indifferent Movies. ‘மகாநதி’ இவரது மாஸ்டர்பீஸ்! ‘மூன்றாம் பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி நடிக்கும்போது கொஞ்சம் நெளிந்தார். இவரது நடிப்பை Stereotyped Acting என்று இப்போது இவர் மறைவுக்குப்பின் பல வலைப்பூவினர் விமர்சனம் செய்கின்றனர். இது இவரது குறையல்ல. கமல் போன்ற வெகுசிலரைத்தவிர, மற்றவர்கள் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவருடைய திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். பல நடிகர் - குரலில் பேசும் இன்றைய மிமிக்ரி கலைஞர்களுக்கு வாரி வழங்கும் ஒரு அட்சயப் பாத்திரமாக பூர்ணம் திகழ்கிறார்.
தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக் கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.
கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், ஏழு மாதங்களுக்கு முன் மேலே போன சுஜாதா எழுதித் தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்.

No comments:
Post a Comment