Sunday, August 23, 2009

இலங்கை வானொலி

ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்கவேண்டும் என்பதே காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கொள்ளும் ஒரு தந்திரம். ஏனைய மொழி பேசுபவர்களுக்குள்ள மொழிப்பற்று ஏனோ தமிழனுக்கு இல்லை, இதனால் அவனின் மொழியை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்திய இலத்திரனியல் ஊடகங்களினால் கொல்லப்பட்ட நம்மொழி இன்றைக்கு நமது ஊடகங்களினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது. ஆகவே இந்திய ஊடகங்களைச் சாடுவதற்க்கு முன்னர் எங்கள் பக்கமுள்ள குப்பைகளை களையவேண்டும்.பலதாசப்பதங்களாக வானொலி உலகில் கொடிகட்டுப்பறந்த வானொலியென்றால் அது இலங்கை வானொலிதான். இலங்கை வானொலியின் தமிழைக்க்கேட்டு தன் மொழி அறிவை வளர்த்ததாக ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தெரிவித்திருந்தார். அமரர்.எஸ்.கே.பரா, திரு.அப்துல் ஹமீத், திருமதி.இராஜேஸ்வரி சண்முகம், திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்,(சில பெயர்கள் மறந்துபோய்விட்டன) எனப் பலரால் கட்டிக்காத்த இலங்கை வானொலி இன்றைக்கு தனியார் வானொலிகளின் போட்டியால் தன் சுயத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடலாம். 90களின் ஆரம்பகாலத்தில் எவ்எம் 99 என்ற பெயரில் ஒரு தனியார் வானொலி மக்களிடையே பிரபலமானது. கொழும்பையும் அதனைச்சூழவுள்ள இடங்களிலும் மாத்திரம் அந்த ஒலிபரப்பு கேட்ககூடியாதாக இருந்தது. பின்னர் 98களின் நடுப்பகுதியில் ஒரு பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகி ஜூலையில் 24மணி நேர சேவையாக சூரியன் எவ்எம் தொடங்கியது. ஒரு இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு ஆரம்பமான சூரியன் பட்டிதொட்டியயெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வரட்சியாக இருந்த வானொலி நேயர்களுக்கு சூரியன் வரப்பிரசாதமாக மாறியது. பேச்சுதமிழில் அறிவுப்புகள் நேயர்களுடனான நேரடி தொலைபேசி அழைப்பு கலந்துரையாடல்கள் என சூரியன் வெற்றிக்கொடிநாட்டிக்கொண்டிருந்தபோது அதே ஆண்டு சக்தி எவ்எம் என்ற எதிர்க்கடை பிரபல அறிவிப்பாளரும் நீலாவணன் என்ற ஈழத்து கவிதைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிஞரின்(இவர் பற்றிய ஒரு சர்ச்சை அடுத்த பதிவில்)மகனான எழில்வேந்தன் தலைமையில் இன்னொரு இளைஞர்கள் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. ரஜனி‍ கமல், விஜய் அஜித் போல் சக்தி என்றால் சூரியன் என்ற போட்டி வானொலிகளுக்கிடையே மட்டுமல்ல நேயர்களுக்கிடையில் கூட ஏற்பட்டது. சக்தியில் காலை வணக்கம் தாயகத்தில் பல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். திரு.எழில்வேந்தனுடன் லோஷன் என்ற புதியவர்(எமக்கு பழையவர்), இலக்ஷ்மன்(அஞ்சனன்), ரமணிதரன்(சிலவேளைகளில்) போன்றவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசென்றார்கள். சிலநாட்களில் இலங்கையின் பிரபல நிறுவனமான ஈஏபியினால் சுவர்ணஒலி என்ற வானொலி நம்நாட்டு அறிவிப்பாளர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலிருந்து யுகேந்திரனையும்(தற்போதைய யுகேந்திரன் வாசுதேவன் நாய்ர்)மலேசியாவிலிருந்து மாலினியையும் ((தற்போதைய மாலினி யுகேந்திரன் )கொண்டு நிகழ்ச்சி படைத்தார்கள். இந்த வானொலியில் தான் முதன்முதலில் மொழிக் கொலைகள் ஆரம்பித்தன எனலாம். சிலகாலத்தில் இந்த வானொலி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தவானொலியால் யுகேந்திரன் மாலினி திருமணம் மட்டும் நடந்த ஒரு நல்லவிடயமாகும். சில காலங்களுக்கு முன்னர் இன்னொரு வானொலியின் ஆட்சி மாற்றம் காரணமாக வெற்றி என்ற பெயரில் இன்னொரு புதிய வானொலி அறிமுகமானது. இவர்கள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகளே செய்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளினதும் நேரம் அதிகம். சில நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 4 மணித்தியாலம். ஆகக்குறைந்தது 2 மணித்தியாலம் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒரு நேயரால் ஓரளவு கேட்கலாம் ஆனால் 4 மணித்தியாலம் என்றால் அவரால் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் கேட்கமுடியாது. இது நேயர்களை தங்கள் வானொலியுடன் முற்றுமுழுதாக இருக்கவைக்கும் உத்தி என்றாலும் சிலவேளைகளில் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கோ அல்லது ஒருகதைக்கோ விடை தெரிய நிகழ்ச்சி முடிவு மட்டும் இருக்கவேண்டும் என்பது வேலைப்பளு உள்ளவர்களுக்கு கஸ்டமான காரியம். கால மாற்றமும் கேபிள் டிவிக்களின் அதிகரித்த வருகையும் அந்த தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் பாணியும் நம்மவர்களையும் தொத்திக்கொண்டது. இதனால் தமிழ் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. யாருக்காக இந்தப்பாடலை கேட்க விரும்புகிறீர்கள் போய் யாருக்கு டெடிக்கேட் செய்ய விரும்புகிறீர்கள் என தமிங்கிலீஸ் பெரும்பாலனவரது நுனிநாக்கில் விளையாடத்தொடங்கியது. இது சிலவேளைகளில் ஆங்கிலம் பெரிதாக தெரியாத நேயர்களைப் பாதிக்கத் தொடங்கியது. அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் பேச நேயரோ என்னசெய்வது என்ற அறியாமல் தட்டுத்தடுமாறுவார். சில இடங்களில் நாம் தமிழ்மொழிக்குள் நுழைந்த மாற்றுமொழிகளுடன் ஒத்துப்போவதில் தப்பில்லை. அதற்காக நிகழ்ச்சியின் பெயரில் தொடங்கி அறிவிப்புவரை ஆங்கிலம் தேவையா? பெரும்பான்மை இன வானொலிகளைக்கேட்டுப்பாருங்கள் அவர்கள் தங்கள் மொழியிலையே கூடுதலாக உரையாடுவார்கள்.தமிழை வளர்க்கின்றேன் என்றுவிட்டு ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதும் தமிழ்மொழி அபிமானிகளிடம் இவர்கள் மேல் கசப்பையே ஏற்படுத்துகின்றது. முன்னைய நாட்களில் நேயர்களின் கடிதங்களை நிகழ்ச்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வார்கள் அதில் நேயர்கள் கூறும் விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்தை வானொலி அறிவிப்பாளரோ அல்லது நிகழ்ச்சிக்கு பொறுப்பானவரோ கூறுவார். ஆனால் இன்றைக்கு அப்படியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. தினக்குரல் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் முழுப்பக்கத்தை இலத்திரனியல் ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கினாலும் சில பந்திகள் மட்டும் நம் நாட்டு ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கப்படுகிறது. ஏனைய இடத்தில் தொல்காப்பியனின் பேட்டியோ இல்லை ராதிகா புதிய நாடகத்தில் நடிக்கும் செய்தியோ இடம் பெறும். அண்மையில் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அழகாக நிகழ்ச்சியை அழகாகத் தமிழில் தொகுத்தளித்தார். இதுவரை ஆங்கிலத்தில் தொகுப்புகளைக்கெட்டுப் புளித்த அந்த இளம்பாடகர்கள் நிச்சயம் இந்த தொகுப்பாளரையும் அவரது தமிழையும் வியந்திருப்பார்கள். ஒரு தொலைக்காட்சியின் குறைகளை ஒவ்வொருவாரமும் யாராவது குறிப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வானொலி தொலைக்காட்சி என்று நாம் குற்றம் சுமத்த விரும்பினால் இந்தப் பதிவு பாகம் பாகமாக வரவேண்டும். இவர்களிடம் எந்த நிறைகளும் இல்லையா எனக்கேட்டால் நிச்சயமாக நிறைய இருக்கிறது ஆனால் அதற்க்கு முன்னர் இவர்கள் தங்கள் குறைகளை குறிப்பாக மொழிக்கொலையை நிறுத்தினால் இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Thursday, July 30, 2009

ஒலி மீண்டும் ஒலிக்குமா ..?

என்ன ஆச்சு ஒலி 96.8 வானொலிக்கு
உலக நேயர்கள் மத்தியில் அமோக வரவேர்ப்பு பெற்ற வானொலி 96.8 ஆனால் தற்போது சிற்றலையிலும் ஒலிக்கவில்லை.இணையத்திலும் ஒலிக்கவில்லை.கேட்க நாங்க ரெடி . மீண்டும் ஒலிபரப்ப நீங்க ரெடியா ...?

முதலில் 7170 khz- இல் நீண்ட நாட்களாக ஒலி 96.8 நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வந்த நாங்கள் 7275 khz-இல் தெளிவில்லாமல் கொஞ்ச நாள் கேட்டு வந்தோம்.தற்போது இணையத்திலும் ஒலிக்கவில்லை .காரணம் என்ன ... ?

என்னை பாட சொல்லாதே ..?


என்ன பாட்டு பாட ...?


Saturday, July 25, 2009

ஜெர்மனியில் செந்தேன் மழை

’’இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குவது எஸ்.பி. மயில்வாகனன்’’ என்று காதோரம் ஒலித்த அந்த தேன்மதுர தமிழோசைக் குரலை ஒரு காலத்தில் தீவிரமாகக் கேட்டு ரசித்தவன். பாடல்களைவிட அதைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களின் குரல் மீது எனக்கு தீராத காதலே இருந்தது.
முகம் தெரியாத அந்த அன்பு அறிவிப்பாளர்களில் கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, ராஜகுரு சேனாதிபதி கனகரத்னம் என்று இன்றைக்கும் பலரது மனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த குரலுக்குச் சொந்தக்காரர்கள் பற்றிய விபரங்களும் காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது! இவர்களில் ஆறுதலாக இன்று நம்முன்னே வளைய வருபவர் பி.எச்.அப்துல்ஹமீது ஒருவர் மட்டும்தான்.
எனக்கும் என் மூத்த சகோதரிக்கும்தான் இவர்களின் குரல்களைக் கேட்பதில் மிகப்பெரும் போட்டியே நடக்கும். எங்கிருந்தோ பேசும் அவர்களின் அன்பான குரலையும் பாடல்களையும் காற்றலை மூலம் வீட்டுக்குள் இழுத்து வரும் எங்கள் வீட்டில் இருந்த அந்த கறுப்பு நிற பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.
அதன் பிறகு கைக்கு அடக்கமான டிரான்சிஸ்டர்கள் அறிமுகமான போது எனக்கே எனக்காக ஒரு குட்டிப்பெட்டியை வாங்கித் தரும்படி என் அப்பாவிடம் கேட்ட போது ’சும்மா இருடா, படிப்பு கெடும்’ என்று அப்போது வாங்கித் தர மறுத்துவிட்டார். பெருத்த ஏமாற்றம்.
என் வகுப்புத் தோழனான பக்கத்துத் தெரு மணிகண்டனின் அப்பா, அவனுக்கு ஒரு அழகான டிரான்சிஸ்டரை வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருக்கும். அதை கையில் வைத்துக் கொண்டு பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும் என்கிற தீராத ஆசையில் மணிகண்டனின் அப்பாவிடமே ஒரு பொய்யைச் சொன்னேன்.
‘’ இதே மாதிரி எனக்கும் ஒரு டிரான்சிஸ்டர் வாங்கித் தர எங்கப்பா சரின்னு சொல்லிட்டாரு. இத ஒரு பத்து நிமிஷம் எங்கப்பாகிட்ட காட்டிட்டு வந்துடவா? ‘’
அவரும் ‘பத்திரமா எடுத்துட்டுப் போயிட்டு கொண்டு வரணும்’ என்ற கண்டிஷனோடு என் கையில் அந்த பாட்டுக்குருவியை என்னிடம் கொடுத்தார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை.அப்பாதான் வாங்கித்தர மாட்டேன் என்கிறார், கிடைத்த இந்த ஓசி டிரான்சிஸ்டரில் ஆசைதீர, நடந்து கொண்டும்; படுத்துக் கொண்டும் பாடல்களை ரசிக்க வேண்டும் என்கிற தாகத்தோடு வேகவேகமாக வீட்டுக்கு நடக்கிறேன். அக்கா பார்த்துவிட்டால் என் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் அந்த குட்டிப் பெட்டியை மிகச் சாமர்த்தியமாக ஒளித்து மறைத்து வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.
அங்கே தாத்தா இரவு நேரத்தில் படுத்துறங்கும் பாயில் ஹாயாக படுத்துக் கொண்டு அந்த அழகான டிரான்சிஸ்டரை மார்போடு அணைத்தபடி பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இலங்கை வானொலியின் அந்த அன்பு அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் மிக நெருக்கமாக என்னோடு பேசிப்பேசி பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். நேரம் போவது தெரியாமல் அந்த இன்ப அனுபவத்தில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
தடாரென என் பக்கத்தில் எதோ சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தால், மிக அருகில் இரண்டு கால்கள்.
அப்பா!
மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் என் அப்பா சில நேரங்களில் கோபம்கொண்டு என்னை கம்பெடுத்து அடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது அந்தக் கம்பு அவர் கையில்!
தொடையில், இடுப்பில் என அடுத்தடுத்து அடி! அடுத்த சில நொடிகளில் அந்த டிரான்சிஸ்டர் அவர் கையில்.
இன்னொரு கையோடு என்னைப் பிடித்தபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி கீழே ஹாலுக்கு வருகிறார். அங்கே மணிகண்டன் கோபத்தோடு நின்று கொண்டிருக்கிறான். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அப்பாவிடம் பொய் சொல்லி அவனின் டிரான்சிஸ்டரை இரவல் வாங்கி வந்த விஷயத்தை என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டிருக்கிறான் என்பது அடுத்து நடந்த சம்பாஷணைகளில் எனக்குப் புரிந்த்து.
அவனிடம் அதை நீட்டியதும் அவன் பறந்து போனான். ’இப்படி அடுத்தவங்ககிட்ட இரவல் வாங்கிட்டுவந்து பாட்டுக் கேட்கணுமா? உனக்கே அசிங்கமா தெரியலை?’ என்று அம்மாவின் பாட்டு வேறு!ஆனால் விழுந்த அடிகளுக்கு ஆறுதலாக அப்பா அடுத்த நாளே என்னைக் கடைக்குக் கூட்டிப்போய், மணிகண்டனின் டிரான்சிஸ்டரைவிட மிக அழகான ஒன்றை எனக்கே எனக்காக வாங்கிக் கொடுத்தார். அக்காவுக்கு அந்த பழைய பிலிப்ஸ் ரேடியோ முழு உரிமையாகிப் போனது. அவ்வப்போது என்னிடம் ‘ஓசி’ வாங்கி டிரான்சிஸ்டரிலும் பாட்டுக் கேட்பாள்.இப்படி பல விழுப்புண்களை தாங்கிய சரித்திரம் கொண்டது எனது இசை ஆர்வம்!
பாடல்கள் மீது எனக்கு ஒரு ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய அந்த இலங்கைத் தமிழ் வானொலி காணாமலே போய்விட்டது. ஆனால் இவையனைத்திற்கும் ஆறுதல் பரிசாக அவ்வபோது சூரியன் எப்.எம்மில், நடுநிசி நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்பி பரவசப்படுத்துபவர் யாழ்சுதாகர். அவரது கம்பீரமான குரலும், பாடல்களுக்கு அவர் கொடுக்கிற கவிதை அறிமுகமும், அந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரங்களும் மனசுக்கு இதமான ஒன்று! அவரது வலைப்பக்கத்தில் இலங்கை வானொலி பற்றியும் பல்வேறு பாடல்கள் சம்பந்தமான அரிய பல தகவல்களும் நிறைந்து கிடக்கிறது. இசைப்ரியர்களுக்கு அது ஒரு வரப்ரசாதம்தான்.
அதே போல ஒரு நாள் இணைய வானொலிகள் பற்றி அறிய, வலையை வீசிக் கொண்டிருந்ததில் ஜெர்மனியிலிருந்து ஒரு கவிக்குயிலின் குரல் என் காதுகளை குளிர வைத்தது. அதே இலங்கைத் தமிழ், பாடல்களை வழங்குவதற்குமுன் அவரது குட்டிக் குட்டிக் கவிதைகள் என அந்தக்குரல், என்னை இலங்கை தமிழ் வானொலியைக் கேட்டு ரசித்த பால்ய நாட்களுக்கே கொண்டுபோய் நிறுத்தியது. தினமும் கேட்டு ரசிக்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் எனது கணினியில் அந்தக் கவிதைக்குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...காணாமல் போன இலங்கைத் தமிழ் வானொலியின் வாரிசாக இந்தக் கவிதைக்குயிலை நான் கண்டெடுத்ததாகவே கருதுகிறேன்.
'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்பதற்கேற்ப யாழ்சுதாகரின் வலைப்பக்கத்தின் இணைப்பையும், ஜெர்மனியிலிருந்து இயங்குகிற கவிதைக்குயில் திருமதி.ராகிணி அவர்களின் வலைப்பக்க இணைப்புகளையும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் கொள்கிறது என் இசைமனது....
http://kalyanje.blogspot.com/2009/07/blog-post_23.html

Wednesday, June 10, 2009

சீன வானொலியின் இணையப்பக்கம் தமிழில்

சீன வானோலியின் தமிழ்மொழி இணையப்பக்கம். அதில் அவர்கள் வெறும் வானோலி விசயங்களை மட்டும் தரவில்லை. சீனாவின் செய்திகள், வெளிநாட்டுச்செய்திகள் மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவைகளை முகப்பில் கொண்டுள்ளது.

இதன் மூலம் சீனப்பார்வையில் உலகத்தினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது.மற்றும் வானோலியின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவாக இணைப்பாக கொண்டுள்ளது. ஆனால் என்ன கஷ்டம் அது rm பைல் பார்மட்டில் உள்ளது. ரியல் பிளேயர் இருந்தால் இயக்கிக்கொள்ளலாம். இல்லையேல் ரியல் பிளேயர் கோல்டுற்க்கான பதிவிறக்க இணைப்பு கொடுக்கபட்டுள்ளது அதில் இறக்கிக்கொள்ளலாம்.தமிழ் திரைப்பாடல்களின் தொகுப்பும் அதில் உள்ளது. அவற்றையும் தளமிறக்கிக்கொள்ளலாம்.மேலும் ஒரு முக்கியமான விசயம் சீன மொழியை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களூக்கு தமிழ் மூலமாக கற்றுக்கொள்ள அதில் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள் ஒலிப்பதிவாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இன்பபயணக்கட்டுரைகள், பண்பாடும் கதையும்,சமுக வாழ்வு,அறிவியல் உலகம், சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வு பாதுகாப்பு, விளையாட்டுச்செய்திகள் எனவும் மற்றும் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய விசயங்களையும் உள்ளடக்கி ஒரு முழு போர்டலாகவே இயங்கி வருகிறது.உண்மையில் சீனத்தைப்பற்றி அறிந்து கொள்ள முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

சீன வானொலியில் தமிழ்

வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு.தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது ஸ்டுடியோவிலிருந்து ஒரு மணிநேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது. இதன் வாயிலாக கடந்த பல ஆண்டுளில், இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வமிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது.இந்த வானொலி நிலையம் முதல் முதலில் 1941ல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும் கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவு, ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப்பெரிய அளவான 5 லட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது. இது சிஆர்ஐயின் 43 மொழி சேவைகள் பெற்ற மொத்தக் கடிதங்களில் சுமார் நான்கில் ஒருபங்கு கடிதங்களாகும். இந்தப் பிரிவின் இயக்குநரான திருமதி ஜூ ஜூவான் ஹூவா, இந்தத் தகவலை ஆழ்ந்த திருப்தியுடன் வெளியிட்டார்.தமிழ்மொழி தனியொரு நாட்டின் தேசிய மொழி அல்ல. அதனால் பிற மொழிப்பிரிவுகள் சில சமயங்களில் அவ்வளவு முக்கியத்துவமுள்ள ஒரு சேவையாகக் கருதுவதில்லை. ஆனால் எங்களது ஒலிபரப்புகளுக்கு மக்களிடம் பெற்ற செல்வாக்கும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் இதற்கு மிக அதிகமாக ஈடு கட்டி விடுகிறது என்றும் அவர் கூறினார்.சிஆர்ஐயின் தமிழ்ப் பிரிவில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்த இரு தமிழ் நிபுணர்களும் சென்னையிலிருந்து வந்தவர்களாவர். இவர்களில் மரியா மைக்கேல் பெய்ஜிங்கில் கடந்த 11 மாதங்களாக இருந்து வருகிறார்.அவருடைய சகா அந்தோணி கிளீட்டஸ் சிஆர்ஐயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறார். அவர்களின் முக்கியக் கடமை சீனப் பத்திரிகையாளர்களின் தமிழை செம்மைப்படுத்துவதாகும். அவர்கள் சில நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒலிபரப்புவார்கள்.வியக்கத்தக்க மொழித்தூய்மைஇந்தப் பிரிவில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்கவைக்கிறது என்று கிளீட்டஸ் கூறினார். நாம் பேசும் தமிழில் பிராந்திய மாறுபாடுகள், ஆங் கிலக் கலப்பு முதலியன இருக்கும். ஆனால் இந்த சீனர்கள் பேசும் தமிழ் இலக்கண சுத்தமாக கலப்பற்ற தூய்மை யான தமிழாக இருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது, நம்பற்கரியதாக இருக்கிறது என்கிறார் கிளீட்டஸ்.இதனால் சீன நிகழ்ச்சித் தயாரிப் பாளர்கள் தமிழர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் கடிதங்களுக்கும் சுமுகமாக சரளமாக பதிலளிக்கின்றனர். சுமார் 300 சிஆர்ஐ தமிழ் சேவை ரசிகர் மன்றங்கள் தமிழ் நாட்டில் உள்ளனவென்றும், அவர்கள் தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கின்றனர் என்றும் கிளீட்டஸ் கூறுகிறார்.இந்தியாவிலிருந்து, இந்த சிஆர்ஐ வானொலி நிலையத்துடன் சுமார் 28 ஆயிரம் மக்கள் முறைப்படி பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு டி-சர்ட்டுகள், நிலையத்தின் செய்திக் கடிதம், இதழ்கள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பப்படுகின்றன.இயக்குநர் திருமதி ஜூ, தமிழ் ரசிகர்களுக்குக் கலையரசி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். இது போன்றே இரு சீன துணை இயக்குனர்கள் வாணி என்றும் கலைமகள் என்றும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக் கிறார்கள்.அண்மையில் ரசிகர்களிடமிருந்து வந்துள்ள தொலைபேசி அழைப்புகளி லும், கடிதங்களிலும் சீனாவில் அண்மை யில் ஏற்பட்ட நிலநடுக்க விவரங்கள், நிவாரணப் பணிகள் பற்றியும் கேட்டு, இந்த சோகநிகழ்ச்சிக்குத் தங்கள் இரங் கலைத் தெரிவித்துக்கொண்டிருக் கிறார்கள்.1962ல் இந்திய-சீன எல்லைத் தகராறு ஏற்பட்டு, அது முடிந்ததற்குப் பின்னரும் இந்த வானொலித் தொடர்பு இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது.ஆங்கிலப் பட்டப்படிப்புப் பெற்ற இந்தத் துறையின் இயக்குநர் 1975ல் இந்த வானொலியில் சேர்ந்தார். அதன்பின் தமிழ் தெரிந்தவர்களிடம் 20 மாதம் பயிற்சி பெற்றார். பின்னர் தஞ்சாவூருக்கு வந்து ஓராண்டு தமிழ் பயின்றார். இதுவரை ஆறு தடவை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.சீனத் தகவல் தொடர்பு பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் எந்தக் கல்வி நிலையத்துடனும் பங்காளியாகத் தொடர்பு கொள்வதற்கு ஆவலாக உள்ளது.இங்கு தமிழ்த் திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றன. ரஜினிகாந்த் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள நடிகர். இந்தப் பல்கலைக் கழக மாணவர்களுக்குத் தமிழில் பேச, எழுத, உரையாடக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிஆர்ஐயிலிருந்து தமிழ் இதழ்கள் தினமணி போன்றவை வாங்கிப் படிக்கப்படுகின்றன. தமிழ் உச்சரிப்பு கடினமாக இருந்தபோதிலும் மாணவர்கள் சிரமப்பட்டு ஆவலுடன் படிக்கிறார்கள், பேசுகிறார்கள்.