Sunday, August 23, 2009

இலங்கை வானொலி

ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்கவேண்டும் என்பதே காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கொள்ளும் ஒரு தந்திரம். ஏனைய மொழி பேசுபவர்களுக்குள்ள மொழிப்பற்று ஏனோ தமிழனுக்கு இல்லை, இதனால் அவனின் மொழியை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்திய இலத்திரனியல் ஊடகங்களினால் கொல்லப்பட்ட நம்மொழி இன்றைக்கு நமது ஊடகங்களினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது. ஆகவே இந்திய ஊடகங்களைச் சாடுவதற்க்கு முன்னர் எங்கள் பக்கமுள்ள குப்பைகளை களையவேண்டும்.பலதாசப்பதங்களாக வானொலி உலகில் கொடிகட்டுப்பறந்த வானொலியென்றால் அது இலங்கை வானொலிதான். இலங்கை வானொலியின் தமிழைக்க்கேட்டு தன் மொழி அறிவை வளர்த்ததாக ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தெரிவித்திருந்தார். அமரர்.எஸ்.கே.பரா, திரு.அப்துல் ஹமீத், திருமதி.இராஜேஸ்வரி சண்முகம், திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்,(சில பெயர்கள் மறந்துபோய்விட்டன) எனப் பலரால் கட்டிக்காத்த இலங்கை வானொலி இன்றைக்கு தனியார் வானொலிகளின் போட்டியால் தன் சுயத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடலாம். 90களின் ஆரம்பகாலத்தில் எவ்எம் 99 என்ற பெயரில் ஒரு தனியார் வானொலி மக்களிடையே பிரபலமானது. கொழும்பையும் அதனைச்சூழவுள்ள இடங்களிலும் மாத்திரம் அந்த ஒலிபரப்பு கேட்ககூடியாதாக இருந்தது. பின்னர் 98களின் நடுப்பகுதியில் ஒரு பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகி ஜூலையில் 24மணி நேர சேவையாக சூரியன் எவ்எம் தொடங்கியது. ஒரு இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு ஆரம்பமான சூரியன் பட்டிதொட்டியயெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வரட்சியாக இருந்த வானொலி நேயர்களுக்கு சூரியன் வரப்பிரசாதமாக மாறியது. பேச்சுதமிழில் அறிவுப்புகள் நேயர்களுடனான நேரடி தொலைபேசி அழைப்பு கலந்துரையாடல்கள் என சூரியன் வெற்றிக்கொடிநாட்டிக்கொண்டிருந்தபோது அதே ஆண்டு சக்தி எவ்எம் என்ற எதிர்க்கடை பிரபல அறிவிப்பாளரும் நீலாவணன் என்ற ஈழத்து கவிதைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிஞரின்(இவர் பற்றிய ஒரு சர்ச்சை அடுத்த பதிவில்)மகனான எழில்வேந்தன் தலைமையில் இன்னொரு இளைஞர்கள் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. ரஜனி‍ கமல், விஜய் அஜித் போல் சக்தி என்றால் சூரியன் என்ற போட்டி வானொலிகளுக்கிடையே மட்டுமல்ல நேயர்களுக்கிடையில் கூட ஏற்பட்டது. சக்தியில் காலை வணக்கம் தாயகத்தில் பல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். திரு.எழில்வேந்தனுடன் லோஷன் என்ற புதியவர்(எமக்கு பழையவர்), இலக்ஷ்மன்(அஞ்சனன்), ரமணிதரன்(சிலவேளைகளில்) போன்றவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசென்றார்கள். சிலநாட்களில் இலங்கையின் பிரபல நிறுவனமான ஈஏபியினால் சுவர்ணஒலி என்ற வானொலி நம்நாட்டு அறிவிப்பாளர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலிருந்து யுகேந்திரனையும்(தற்போதைய யுகேந்திரன் வாசுதேவன் நாய்ர்)மலேசியாவிலிருந்து மாலினியையும் ((தற்போதைய மாலினி யுகேந்திரன் )கொண்டு நிகழ்ச்சி படைத்தார்கள். இந்த வானொலியில் தான் முதன்முதலில் மொழிக் கொலைகள் ஆரம்பித்தன எனலாம். சிலகாலத்தில் இந்த வானொலி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தவானொலியால் யுகேந்திரன் மாலினி திருமணம் மட்டும் நடந்த ஒரு நல்லவிடயமாகும். சில காலங்களுக்கு முன்னர் இன்னொரு வானொலியின் ஆட்சி மாற்றம் காரணமாக வெற்றி என்ற பெயரில் இன்னொரு புதிய வானொலி அறிமுகமானது. இவர்கள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகளே செய்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளினதும் நேரம் அதிகம். சில நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 4 மணித்தியாலம். ஆகக்குறைந்தது 2 மணித்தியாலம் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒரு நேயரால் ஓரளவு கேட்கலாம் ஆனால் 4 மணித்தியாலம் என்றால் அவரால் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் கேட்கமுடியாது. இது நேயர்களை தங்கள் வானொலியுடன் முற்றுமுழுதாக இருக்கவைக்கும் உத்தி என்றாலும் சிலவேளைகளில் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கோ அல்லது ஒருகதைக்கோ விடை தெரிய நிகழ்ச்சி முடிவு மட்டும் இருக்கவேண்டும் என்பது வேலைப்பளு உள்ளவர்களுக்கு கஸ்டமான காரியம். கால மாற்றமும் கேபிள் டிவிக்களின் அதிகரித்த வருகையும் அந்த தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் பாணியும் நம்மவர்களையும் தொத்திக்கொண்டது. இதனால் தமிழ் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. யாருக்காக இந்தப்பாடலை கேட்க விரும்புகிறீர்கள் போய் யாருக்கு டெடிக்கேட் செய்ய விரும்புகிறீர்கள் என தமிங்கிலீஸ் பெரும்பாலனவரது நுனிநாக்கில் விளையாடத்தொடங்கியது. இது சிலவேளைகளில் ஆங்கிலம் பெரிதாக தெரியாத நேயர்களைப் பாதிக்கத் தொடங்கியது. அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் பேச நேயரோ என்னசெய்வது என்ற அறியாமல் தட்டுத்தடுமாறுவார். சில இடங்களில் நாம் தமிழ்மொழிக்குள் நுழைந்த மாற்றுமொழிகளுடன் ஒத்துப்போவதில் தப்பில்லை. அதற்காக நிகழ்ச்சியின் பெயரில் தொடங்கி அறிவிப்புவரை ஆங்கிலம் தேவையா? பெரும்பான்மை இன வானொலிகளைக்கேட்டுப்பாருங்கள் அவர்கள் தங்கள் மொழியிலையே கூடுதலாக உரையாடுவார்கள்.தமிழை வளர்க்கின்றேன் என்றுவிட்டு ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதும் தமிழ்மொழி அபிமானிகளிடம் இவர்கள் மேல் கசப்பையே ஏற்படுத்துகின்றது. முன்னைய நாட்களில் நேயர்களின் கடிதங்களை நிகழ்ச்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வார்கள் அதில் நேயர்கள் கூறும் விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்தை வானொலி அறிவிப்பாளரோ அல்லது நிகழ்ச்சிக்கு பொறுப்பானவரோ கூறுவார். ஆனால் இன்றைக்கு அப்படியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. தினக்குரல் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் முழுப்பக்கத்தை இலத்திரனியல் ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கினாலும் சில பந்திகள் மட்டும் நம் நாட்டு ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கப்படுகிறது. ஏனைய இடத்தில் தொல்காப்பியனின் பேட்டியோ இல்லை ராதிகா புதிய நாடகத்தில் நடிக்கும் செய்தியோ இடம் பெறும். அண்மையில் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அழகாக நிகழ்ச்சியை அழகாகத் தமிழில் தொகுத்தளித்தார். இதுவரை ஆங்கிலத்தில் தொகுப்புகளைக்கெட்டுப் புளித்த அந்த இளம்பாடகர்கள் நிச்சயம் இந்த தொகுப்பாளரையும் அவரது தமிழையும் வியந்திருப்பார்கள். ஒரு தொலைக்காட்சியின் குறைகளை ஒவ்வொருவாரமும் யாராவது குறிப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வானொலி தொலைக்காட்சி என்று நாம் குற்றம் சுமத்த விரும்பினால் இந்தப் பதிவு பாகம் பாகமாக வரவேண்டும். இவர்களிடம் எந்த நிறைகளும் இல்லையா எனக்கேட்டால் நிச்சயமாக நிறைய இருக்கிறது ஆனால் அதற்க்கு முன்னர் இவர்கள் தங்கள் குறைகளை குறிப்பாக மொழிக்கொலையை நிறுத்தினால் இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.