Sunday, September 21, 2008

என் அப்பாவின் ரேடியோ - ஷாஜி





மாலையில் குன்றுகளுக்குமேல் குளிர்ந்த காற்று சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இன்னொரு துயரமான நாள். ஏழுவயதான நான் தனித்தவனாக, கைவிடப்பட்டவனாக, குன்றின் உச்சியில் இருந்த வீட்டுக்கு முன்னால் வெண்மேகங்களை ஊடுருவி மண்ணில் சாயும் சூரியக் கதிர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று குன்றுக்கு கீழே வளைந்துசெல்லும் மண்சாலையிலிருந்து ஒரு இசைத்துணுக்கு சிதறி வருவதைக் கேட்டேன். நான் அங்கிருந்த ஒரு துருத்தி நிற்கும் பாறையை நோக்கி ஓடினேன். அதிலிருந்து பார்த்தால் தழைத்த பச்சைக்கிளைகளினூடாக பாதையை ஓரளவு பார்க்க முடியும். வேட்டியும் சட்டையும் அணிந்த ஓர் உயரமான மனிதன் வீட்டை நோக்கி வருவதைக் கண்டேன். இசை நெருங்கி நெருங்கி வந்தது. அவர் கையில் ஒரு ரேடியோ இருந்து பாடுவதை அப்போதுதான் கவனித்தேன்.
அடுத்த கணம்தான் அது என் அப்பா என்பதை உணர்ந்தேன். என்னுடைய உற்சாகம் எல்லை கடந்தது. எவரிடமும் அனுமதி கோராமல் நான் கீழே பாய்ந்து போய் என் 'அச்சாய'னை நெருங்கினேன். உரிமையாளனை நெடுநாட்களாகப் பிரிந்திருந்த குட்டிநாய் போல அப்பாவை சுற்றி சுற்றிவந்து அந்த ரேடியோவைப் பார்த்தேன். “உக்காந்து படிக்காம இங்க என்னடா பண்றே?” என்ற அப்பாவின் அதட்டல் என் உற்சாகத்தைக் குறைக்கவேயில்லை. நாங்கள் குன்றுமீது ஏறிக்கொண்டிருக்கும்போது இசையும் கூடவே வந்தது. உலகையே உரிமைகொண்டவனின் பெருமிதத்துடன் நான் அப்பாவின் பின்னால் நடந்துவந்தேன். என் அப்பாவிடம் ரேடியோ இருக்கிறது! என்னை அதட்டும் என் மாமாக்களால் கனவிலும் நினைக்க முடியாத ஒன்று!
அது என் அம்மாவின் பிறந்த வீடு. அங்கே நின்று படிப்பதற்காக என்னை விட்டிருந்தார்கள். என் சொந்த வீட்டிலிருந்து பத்து மைல் தொலைவிருக்கும். ஏழுவயதான எனக்கு அது நெடுந்தொலைவு. அது ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். என் தாத்தா மிகவும் கண்டிப்பானவர். பாட்டி எதைப்பற்றியோ தெரியவில்லை, எப்போதுமே குறை சொல்லி திரிவார். மாமாக்களின் முக்கிய பொழுதுபோக்கு என்னை கண்டிப்பதும் அடித்து வதைப்பதும்தான்.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் தாத்தாவும் அப்பாவும் சாயங்கால குடிக்குப்பின் உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ரேடியோவை நெருங்கி அமர்ந்து அதைக் கேட்ட படியும் யாரும் பார்க்காமல் தொட முயன்றபடியும் இருந்தேன். அந்த குமிழ்களைத் திருகவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தேன் என்றாலும் அப்பாமீது கடுமையான அச்சமும் இருந்தது. மறுநாள் மாலை என் அப்பா கிளம்புவதுவரை ரேடியோ உச்சத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் சென்றபோது நான் மனமுடைந்து அழுதேன். முக்கியமாக அப்பா அந்த ரேடியோவைக் கொண்டுபோனதில் உள்ள துயரத்தால்தான். அப்பாவுடன் என் வீட்டுக்குச் சென்று அந்த ரேடியோ அருகிலேயே அமர்ந்து கொள்ள விரும்பினேன். அந்த நாள்வரை தொலைதூரத்தில் இருந்த என் அம்மாவையும் தங்கையையும் நினைத்து தனிமையில் அழுத நான் அன்றிலிருந்து அந்த ரேடியோவையும் நினைத்து அழ ஆரம்பித்தேன். பள்ளிக்குப் போகிற வழியில் எங்கிருந்தாவது கேட்கும் ரேடியோ பாட்டுகள் என் மனதில் துயரத்தை நிரப்பியது.
ரேடியோ பற்றிய என் முதல் நினைவென்பது பெரிய, உலோக நிறமான ஒரு ரேடியோபெட்டிதான். ஒருமுறை என் தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் அதை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தார். என்னை அது அக்கணமே கவர்ந்தது. பக்கத்தில் இருந்த பிற உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும் வழியில், எங்கள் வீட்டுக்கும் வந்திருந்தார். அவர் பிற வீடுகளுக்கு போனபோது நானும் அந்த ரேடியோவை பின் தொடர்ந்து அவருடன் சென்றேன். அந்த ரேடியோ அருகிலேயே நெடுநேரம் தங்கி நின்றேன்.
விரைவில் என் அப்பாவின் அண்ணா ஒரு ‘டிரான்ஸிஸ்டர்’ ரேடியோயை வாங்கினார். அந்தப் பிராந்தியத்தில் அதுதான் முதல். அப்படி ஒரு அற்புதமான பொருள் எங்கள் குடும்பத்திலேயே வந்திருப்பதை அறிந்ததும் நான் என் ‘பேரப்பனின்’ வீட்டுக்கு ஓடிச்சென்றேன். அது சிவப்பு கலந்த நிறமுள்ள அழகான சிறிய ரேடியோ. அதில் நான் கேட்ட முதல் பாடலை இன்றும் நினைவுகூர்கிறேன். “அயித்தானாம் நீ என் அயித்தானாம் நீ” என்ற தமிழ்பாடல்.
ஒரு வருடம் கழித்துதான் நான் பாட்டி வீட்டிலிருந்து நிரந்தர விடுதலைபெற்று எங்கள் வீட்டுக்குப் போக முடிந்தது. அன்றுமுதல் அந்த ரேடியோ என்னுடைய இணைபிரியாத தோழனாக இருந்தது. நான் அதனருகிலேயே தூங்கி விழிந்து உணவுண்டு வாழ்ந்தேன். ரேடியோயை விட்டுப்பிரிய மனமில்லாததனாலேயே நான் பள்ளியை வெறுத்தேன். சாயங்காலம் மனியடித்ததுமே மூச்சிரைக்க ஓடி வீட்டுக்கு வந்து ரேடியோ முன் பாய்ந்து சென்று அமர்வேன். என்னுள் இருக்கும் இசைப்பித்து அந்த ரேடியோ வழியாக வந்ததுதான் என்று எண்ணுகிறேன். யேசுதாஸ், எஸ்.ஜானகி, ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜெயச்சந்திரன் போன்றவர்கள் என் கிராமத்து மனிதர்களைக்காட்டிலும் எனக்கு நெருக்கமானவர்களாக ஆனார்கள். ரேடியோ இல்லாமல் என்னால் உயிர்வாழமுடியாமல் ஆகியது.
அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் நான்தான் ரேடியோவை இயக்குவேன். ஆலப்புழா, திரிச்சூர் நிலையங்கள் எங்கே இருக்கின்றன என்பதை என் கைகளே அறிந்திருந்தன. திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நிலையங்கள் மெல்லிதாக கிடைக்கும். டி.எம்.சௌந்தர ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியவர்களின் குரல்களைக் கொண்டுவந்த திருச்சிராப்பள்ளி, மதுரை நிலையங்கள் நன்றாக கிடைக்கும். அந்த ரேடியோ எனக்கு வெளியுலகைக் காட்டிக் கொண்டிருந்தது. நான் வாழ்ந்த மலைகள் எல்லையிட்ட சின்னஞ்சிறு கிராமத்துக்கு வெளியே முடிவிலா உலகம் ஒன்று விரிந்து கிடப்பதை நான் என் ரேடியோவில் கேட்டேன்.
இத்தனை மனிதர்களை, இத்தனை விரிந்த உலகை, இந்த சிறிய பெட்டி எப்படி கொண்டுவந்து சேர்க்கிறது என்று அறிய எனக்கு பெரும் ஆவல் இருந்தது. ஒரு நாள் ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு நிலையம் எப்படி அமைந்திருக்கிறது என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்தது. குமிழை கடைசி நிலையத்துக்கும் அப்பால் திருப்பிக் கொண்டுசென்றால் என்ன கேட்கும்? குமிழ் ஒரு எல்லைக்குமேல் செல்ல மறுத்தது. நான் திருகியபடியே இருந்தேன். டின்ங்ங் . . . என்ற ஒலி கேட்டது. உள்ளே ஏதோ அறுந்து நிலையத்தைக் காட்டும் முள் காணாமலாயிற்று! நான் அப்படியே உறைந்து போனேன். என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரியும். அம்மாவிடம் ஓடிப்போய் சொல்லி என்னை காப்பாற்றும்படி கெஞ்சினேன். அம்மா "உனக்குத்தான் உங்கப்பாவை பத்தி தெரியுமே" என்று சொல்லிவிட்டபோது என் பயம் மேலும் அதிகரித்தது.
பகல் முழுக்க நான் அம்மா பின்னாலேயே சுற்றி கெஞ்சிக் கொண்டிருந்தேன். அப்பாவின் கோபத்திலிருந்து அம்மாவால் என்னை காப்பாற்ற முடியும் என்று நம்பினேன். அப்பா வரும் நேரம் நெருங்க நெருங்க என் நெஞ்சுத் துடிப்பு அதிகரித்தபடியே சென்று அதை என் காதாலேயே கேட்டேன்! அப்பா வரும் காலடியோசை கேட்டது. வழக்கம்போல அவர் வந்ததுமே ரேடியோயை எடுத்து அதை இயக்க ஆரம்பித்தார். பின்கட்டில் நான் செத்தவனைப்போல நின்று கொண்டிருந்தேன். அப்பா தன் கனத்த குரலில் “டேய் . . . வாடா இங்கே” என்று கத்துவதைக் கேட்டேன். அவர் முன் சென்று உறைந்து நின்றேன் “கழுவேறியுடெ மகனே.. என்னடா செஞ்சே ரேடியோவை?” நான் தப்புவதற்கான கடைசி முயற்சியாக முணுமுணுத்தேன் “நான் ஒண்ணுமே செய்யலை . . .” சொல்லி முடிப்பதற்குள் என் செவிட்டில் அடி விழுந்தது.
கோபத்தால் கொந்தளித்தபடி என்னை அவர் வசைபாடினார், அடித்தார். நான் அவரிடம் மன்னிப்பு கோரி கதறினேன். என் அம்மா நடுவே புக முயன்றபோது அம்மாவை அவர் கடுமையான கெட்டவார்த்தை சொல்லித் துரத்தினார். என்னை அடித்துச் சுழற்றி அறை மூலைக்குத்தள்ளினார். அந்த ரகளையில் என் கால்சட்டை கழன்றுவிட்டிருந்தது. நிர்வாணமாக இருந்ததை நான் உணரவேயில்லை. அப்பா அந்த ரேடியோவை எடுத்து வாசல்படியில் அடித்து உடைத்தார். உலகுக்கும் எனக்குமான ஒரே சாளரமாக இருந்த என் ரேடியோ வெறும் பிளாஸ்டிக் குப்பையாக மாறியது.
அப்பா மேலும் கோபத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தார். கையில் கிடைத்த அனைத்தையும் எடுத்து என்னை அடித்தார். ரேடியோவின் கைப்பிடியில் ஒரு கயிற்றைக் அகட்டி என் கழுத்தில் தொங்கவிட்டார். உடையாத சில பகுதிகளுடன் அது என் கழுத்தில் கனமாக தொங்கியது. அவர் என்னை வீட்டைவிட்டு எங்காவது ஓடிப்போகச்சொல்லி கத்தினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் உயிர்தப்பி வெளியே ஓடினேன். பக்கத்து ஊரை நோக்கி சாலையில் முழுநிர்வாணமாக கழுத்தில் உடைந்த ரேடியோ தொங்க கதறியபடி ஓடினேன். அந்தி நேரம். வேலைக்குச் சென்றவர்கள் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னுடைய விசித்திரக் கோலத்தை நின்று பார்த்தார்கள். எனக்கு வெட்கம் தோன்றவில்லை. அடியின் வலியாலும் அச்சத்தாலும் நான் என்னை மறந்திருந்தேன்.
அப்போதும் அப்பா என் பின்னால் ரத்தவெறி கொண்ட காட்டு மிருகம் போல துரத்தி வந்துகொண்டிருந்தார். அவர் என்னைப்பிடித்து அந்த ரேடியோவை பிடுங்கி வயலில் வீசி எறிந்தார். திருப்பி வீட்டுக்குப் போகும்படிச் சொல்லி என்னை மீண்டும் அடித்தார். நான் திரும்பி வீடு நோக்கி கதறியபடி ஓடினேன். என் ரேடியோ போயிற்று. என் இசை போயிற்று. என் ஆத்மா ஆழமாகக் காயப்பட்டது.
பல மாதங்கள் வேறு ஒரு ரேடியோ வாங்காமல் இருந்தார் அப்பா. வாங்கிய போது ஒரு ஃபிலிப்ஸ் பாக்கெட் ரேடியோ வாங்கி போகும்போது கூடவே கொண்டுசெல்ல ஆரம்பித்தார். ஆனால் அவர் என்னை ரேடியோ கேட்பதிலிருந்து தடுக்க முடியவில்லை. நான் பக்கத்து வீடுகளுக்குப் போய் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். எங்கெல்லாம் பாட்டு ஒலிக்கிறதோ அங்கெல்லாம் செல்வேன்.
அன்றெல்லாம் சாதாரண மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனம் ரேடியோவாகத்தான் இருந்தது. எந்த வசதியும் இல்லாதவர்கள் கூட ஒரு ரேடியோ வாங்கி வைத்திருந்தார்கள். ஆரம்பகால 'வால்வ்' ரேடியோக்கள் விலை அதிகமானவை, அளவில் பெரியவை. அவை பணக்கார வீடுகளை அலங்கரித்தன. 'டிரான்ஸிஸ்டர்' தொழில்நுட்பம் ரேடியோவை சிறியதும் மலிவானதுமாக ஆக்கியது. ஃபிலிப்ஸ், மர்ஃபி, நெல்கோ, புஷ் போன்ற இந்தியாவில் தயாரிக்கும் ரேடியோக்களைத் தவிர டெலிஃபங் கென், நேஷனல், பானாஸோனிக், சோனி, சான்யோ, தோஷிபா போன்ற வெளிநாட்டு ரேடியோக்களும் எங்கும் காணக்கிடைத்தன.
குறைந்த வான்தொலைவில் உள்ள நிலையங்கள் 'மீடியம் வேவ்' வரிசையிலும் தொலைதூர நிலையங்கள் 'ஷார்ட் வேவ்' வரிசையிலும் கிடைத்தன. வெளிநாட்டு நிலையங்களான பிபிஸி, ரேடியோ ஸ்ரீலங்கா, ரேடியோ பீகிங், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ ரேடியோ போன்றவையும் கிடைத்தன. ஸ்ரீலங்கா ரேடியோ, மாஸ்கோ ரேடியோ போன்றவை மலையாள நிகழ்ச்சிகளையும் அளித்தன. தீவிர கிறிஸ்தவர்கள் ரேடியோ செஷல்ஸ் மற்றும் வாடிகான் ரேடியோவின் மலையாள கிறித்தவ நிகழ்ச்சிகளைக் கேட்டனர்.
மக்கள் ரேடியோக்களை மிகவும் விரும்பினார்கள். வயலில் வேலை செய்யும்போது அருகே மரக்கிளையில் தொங்கியபடியோ டவலில் வரப்பின்மீது வைக்கப்பட்டபடியோ ரேடியோ பாடிக்கொண்டிருக்கும். சேற்று மணமும் பச்சைத்தழை மணமும் கலந்து பாடல்கள் காற்றில் பரவும். பிரியத்திற்குரிய பாடகர்களின் இனிய குரல்கள் மனதை இலகுவாக்கி வேலையை எளிதாக்கின.
சிலர் தங்கள் ரேடியோக்களை தோல் உறைகளுக்குள் போட்டு போகுமிடமெங்கும் கொண்டு சென்றார்கள். பலர் அவற்றை வீட்டில் மேடையில் வைத்திருந்தார்கள். தங்கப்பனைப்போன்ற கூலித்தொழிலாளர்கள் வீட்டில் அரிசிக்கு பணமில்லாதபோதுகூட ரேடியோ பேட்டரி போட்டு தயாராக இருக்கவேண்டுமென்பதில் குறிப்பாக இருந்தார்கள். திரைப்பாடல்கள் ஒலிக்கும் ரஞ்சனி, சலச்சித்ர கானங்ஙள் போன்ற நிகழ்ச்சிகளின்போது ரேடியோவை முடிந்தவரை உரக்க ஒலிக்கவிடுவார் தங்கப்பன். என்னிடம் ஒருமுறை, அவருக்கு 'நூஸிக்' மிகவும் பிடிக்கும் என்று சொன்னார்.
சில திரைரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை எழுதி கேட்டு தங்கள் பெயர் ஒலிப்பதைக் காத்திருப்பார்கள். இசையார்வம் குறைந்தவர்கள் செய்திகள் தெரிந்து கொள்வதற்காகவும் பெரிய விளையாட்டுப்போட்டிகளின் நேரடி வர்ணனை கேட்பதற்காகவும் ரேடியோவை சார்ந்திருந்தார்கள். நெடு நாட்களுக்குப் பின்னர் 1983ல் இந்தியா கிரிக்கெட் உலகப்கோப்பையை வென்றபோது அதன் நேரடி ஒலிபரப்பை நாடெங்கும் கொண்டு சென்றதும் ரேடியோதான்.
ஒரு கட்டத்தில் அப்பா சின்ன ரேடியோக்கள் மீது ஆர்வம் இழந்து மரத்தாலான பெட்டியில் அமைந்த பெரிய ரேடியோ ஒன்றை வாங்கிக் கொண்டுவந்தார். அது நல்ல துல்லியமான ஒலியை அளித்தது. ஆனால் மழைக்காலங்களில் ஒரு கிரீச் ஒலி மட்டுமே அதிலிருந்து வரும். அப்போது ஊர்களெங்கும் ரேடியோ பழுதுபார்க்கும் இடங்கள் பெருகி விட்டிருந்தன.
தபால் வழியாக ரேடியோ ரிப்பேர் படித்தவர்களுக்குகூட வேலை வாய்ப்பு இருந்தது. அப்பா மீண்டும் மீண்டும் ரேடியோவை பழுது பார்க்க எடுத்துக்கொண்டு சென்று திரும்பக் கொண்டுவருவார் ஆனால் அந்த ரேடியோவால் மழைக்கு தாக்குப்பிடிக்கவே முடியவில்லை.
அப்பா அந்த ரேடியோவை கைவிட்டுவிட்டு மீண்டும் பாக்கெட் ரேடியோவுக்கே திரும்பினார். அப்படியாக அந்த கைவிடப்பட்ட ரேடியோ என்னுடைய சொந்த ரேடியோவாக ஆகியது! அந்த ரேடியோ வெப்பமான நாட்களில் நன்றாக வேலைசெய்வதை நான் கவனித்தேன். கோடையில் சிக்கல் இல்லை. எந்த பழுதுபார்ப்பவனும் சரிசெய்யாத அந்த சிக்கலை நான் சரிசெய்ய முயன்றேன். ஸ்க்ரூ டிரைவர் உதவியுடன் ஓயாது அதை திறந்து பொருத்திக் கொண்டிருந்தேன். என்ன செய்தேன் என்று தெரியவில்லை! திடீரென்று ஒரு நாள் அது வேலைசெய்ய ஆரம்பித்தது. என் தொழில்திறனில் பெருமையுடன் கொஞ்சகாலம் அதை கேட்டு ரசித்த பின் ஒரு சிறிய ரேடியோவுக்கு ஆசைப்பட்டு அதை நான் பாபு என்ற பையனுக்கு இருபது ரூபாய்க்கு விற்றேன். அவன் என்னிடம் புகார் ஏதும் சொல்லவுமில்லை. ஆனால் சில வருடம் கழித்து அவன் தற்கொலை செய்துகொண்டான். அதில அந்த ரேடியோவின் பங்கென்ன என்று தெரியவில்லை.
இத்தாலிய விஞ்ஞானியான குக்லில்மோ மார்க்கோனி (Guglielmo Marconi 1874 - 1937) ரேடியோவை கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறதென்றாலும் ரேடியோவின் உருவாக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது விஞ்ஞானிகளின் பங்களிப்பு உள்ளது. என்ன வருத்தம் என்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவகையான ஊதியமோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை. இது ஒரு சிக்கலான பொருளியல் பிரச்சினை. பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகள் குறைவான லாபம் பெறுகையில் பிந்தி உள்ளே நுழையும் தந்திரமான வியாபாரி ஒருவன் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், எதையுமே கண்டு பிடிக்காமல், பெரும் செல்வத்தை ஈட்டுகிறான்.
இன்று பொழுதுபோக்கு ஊடகங்கள் பலவாறாகப் பெருகிவிட்டிருக்கின்றன என்றபோதிலும், ரேடியோ இப்போதும் மிக அதிகமாக கவனிக்கப்படும் ஊடகமாகவே உள்ளது. குறிப்பாக இசை மற்றும் செய்திகளுக்காக. வானொலி ஒலி பரப்பு தொடங்கி நூறு வருடங்கள் தாண்டிவிட்டன என்றாலும் இன்றும் ரேடியோ தொடர்ச்சியான மாறுதல்களுக்கு ஆளாகிவருகிறது. இப்போது பண்பலை வானொலிகள் தொடர்ந்து முளைத்துக்கொண்டிருக்கின்றன. காற்றில் உள்ள பிற மின்னதிர்வுகளால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் குறுகிய தூரம் செல்லும் பண்பலை 1935லேயே எட்வின் ஆம்ஸ்டிராங் (Edwin Armstrong) என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதன் வெகுஜன உபயோகம் சமீப காலமாகத்தான் சூடு பிடித்திருக்கிறது. இப்போது செயற்கைக்கோள் ரேடியோ (Satellite Radio) என்ற புதிய தொழில்நுட்பம் புகழடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு அதிர்வு வாங்கியின் உதவியுடன் ஒரு நிலையத்தில் உள்ள ஒலிபரப்பை மிகத்துல்லியமாக பூமியின் எந்தபகுதிக்குச் சென்றாலும் தெளிவாகக் கேட்கமுடியும்.
இந்தியாவில் 1936ல் அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது. 1937ல் கேரளத்திலும் ரேடியோ ஒலிபரப்பு தொடங்கபப்ட்டது. சென்றவருடம் வரை அது அரசாங்கத்தின் ஏகபோகமாகவே இருந்தது. 2007 மலையாள மனோரமா, மாத்ருபூமி நாளிதழ்கள் பண்பலை நிலையங்களை தொடங்கின. ஏறத்தாழ 15 பண்பலை நிலையங்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 10 பண்பலை நிலையங்கள் உள்ளன. அலைபேசி மற்றும் கார் ஸ்டீரியோக்கள் வழியாகத்தான் இன்று ஏராளமானவர்கள் பண்பலை ரேடியோவை கேட்டு ரசிக்கிறார்கள்.
ரேடியோவின் செல்வாக்கையும் பாதிப்பையும் பற்றிய புகழ்பெற்ற பல பாடல்கள் உலக இசையில் உள்ளன. டோன்னா சம்மர் (Donna Summer) பாடிய 'On The Radio' (1985), ஆர்.இ.எம் (REM) பாடலான 'Radio Song' (1991), ஃப்ரெடி மெர்குரியின் 'Radio Ga Ga' (1984), ஜானி மிச்செல் (Joni Mitchell) பாடிய 'You Turn Me On I'm A Radio' (1972) முதலியவை மிகவும் புகழ்பெற்றவை. சமீபத்திய பாடல்களில் பான் ஜோவி (Bon Jovi) பாடிய 'Radio Saved My Life Tonight, எல்.எல்.கூல் ஜெ (LL Cool J) பாடிய ராப் பாடலான 'I Can't Live Without My Radio', புரூஸ் ஸ்பிரிங் ஸ்டீன் (Bruce Springstein) பாடிய 'Radio Nowhere' போன்றவை சட்டென்று நினைவுக்கு வருபவை. இவ்வரிசையில் மிகவும் புகழ்பெற்ற இன்னொரு பாடல் பிரட்டிஷ் இசைக்குழுவான பக்கில்ஸ் (Buggles) பாடிய 'Video Killed the Radio Star'. இந்தியில் ‘டிஸ்கோ டான்சர்’ என்ற படத்தில் வந்த 'கோயி யஹான் ஆஹ நாச்சே நாச்சே' என்ற பாடல் இப்பாடலின் நேரடித் தழுவல்.
ஃப்ரெடி மெர்க்குரி பாடிய 'ரேடியோ கா கா' எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதன் வரிகள் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை.
ரேடியோ! தனிமையில் அமர்ந்து உன் ஒளியை பார்க்கிறேன்என் பதின்பருவத்து ஒரே தோழனல்லவா நீ?கேட்க வேண்டியதையெல்லாம்நான் என் ரேடியோவில் கேட்டேன்
நாங்கள் கேட்டதெல்லாம் ரேடியோ கா கா, ரேடியோ கூ கூ ரேடியோ! இன்னும் சிலர் உன்னை நேசிக்கிறார்கள்
கண்காட்சிகளை காண்கிறோம், நட்சத்திரங்களைக் காண்கிறோம்தொலைக்காட்சிகளில் மணிக்கணக்காக!காதுகள் இங்கு தேவையே இல்லை!காலங்கள் வழியாக எப்படி மாறுகிறது இசை!
இந்தக் காட்சிகளைக் கண்டு களைக்கும்போதுநமது மிகச்சிறந்த தருணங்கள் மீண்டும் வந்துசேரக்கூடும்!ரேடியோ! இன்னும் சிலர் உன்னை நேசிக்கிறார்கள்
1970களில் எங்கள் ஊர்களில் ஒலிநாடாக்கருவிகள் வந்துசேர்ந்தன. ரேடியோவிலிருந்து டேப் ரிகார்டர்களுக்கு ஆட்கள் மாற ஆரம்பித்தார்கள். அதில் ரேடியோவும் இருந்ததனால் அவை டூ இன் ஒன் என்று அழைக்கப்பட்டன. ஆனால் போதிய மின்வசதி இல்லாத எங்கள் ஊரில் அந்த கருவி பரிதாபமாக தோல்வியடைந்தது. ஒரு ஒலிநாடா பாடி முடிவதற்குள்ளேயே பேட்டரிகள் தீர்ந்து விடும்! ஆகவே பலரும் அதை ரேடியோவாக மட்டுமே பயன்படுத்தினார்கள்.
என் அப்பா ஒரு தீவிர ரேடியோ ரசிகராகவே இருந்தார். ரேடியோவில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்பார். அவர் டேப் ரிகார்டர்களினால் கவரப்படவோ அதை வாங்கவோ இல்லை. அவர் மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இருந்தால் உடனே ரேடியோவைத்தான் இயக்குவார். அப்பாவின் அம்மா இறந்த நாளை நான் நினைவுகூர்கிறேன். அப்பா உண்மையிலேயே நேசித்த ஒரே மனித ஆத்மா அவரது அம்மாதான். அவரது இறப்பு அப்பாவை உலுக்கிவிட்டது. பாட்டியின் உடலருகே அமர்ந்து சிறு குழந்தை போல நெடுநேரம் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் எழுந்து அறைக்குள் சென்று ரேடியோவை போட்டார். பாட்டை முழு ஒலியுடன் வைத்து விட்டு அருகே அமர்ந்து மீண்டும் அழுதார். அன்று கேட்ட ஒரு பாடலை நான் இப்போதும் நினைவுகூர்கிறேன். ‘அந்தி மயங்ஙும் நாடுகளில் அம்பிளி வானில் உயர்ந் நல்லோ . . . வேகம் போ வேகம் போ . . .’
நானும் அப்பாவும் ஒருபோதும் ஒத்துப்போனதில்லை. அவர் ஆணவம் மிக்க மனிதர். எங்களூரின் சமூகப்பிரச்சினைகளில்தான் அவருடைய முதல் ஆர்வம் இருந்தது. என் 12 வயதுக்குப்பின் நான் அவரிடம் நேருக்கு நேர் பேசுவதே குறைந்துவிட்டது. எனக்கு என் தாத்தாவிடம்தான் ஆழ்ந்த பாசம் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு அவருடைய அப்பாவுடன் உறவோ உரையாடலோ இருந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருப்பவரானதனால் தாத்தாவை நான் பார்த்தது குறைவு. ஆனால் அவர்தான் இளமையில் என்னை உண்மையாகவே நேசித்தவர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே அவர் மறைந்தார்.
வளர வளர நான் என் அப்பாவின் மனிதத்தன்மை அற்ற செயல்களுக்கு எதிர்வினை காட்ட ஆரம்பித்தேன். என் கண்களுக்கு அவர் ஒரு சர்வாதிகாரியாகவும் குரூரமானவராகவும் தென்பட்டார். அவர் அடிக்கடி சத்தம் போட்டு சண்டையிட்டபின் எங்கள் வீட்டை மரண அமைதி சூழ்ந்திருக்கும். என் அம்மாவை அவர் அடித்து கொடுமைப்படுத்தியதற்காகவும், குழந்தைகளாகிய எங்களை சித்திரவதை செய்ததற்காகவும் குடும்பத்தை கைவிட்டு பொது காரியங்களுக்காக அலைந்ததற்காகவும் நான் அவரை வெறுத்தேன். மூத்த மகன் என்ற முறையில் அவரால் அதிகமாகவதைக்கப்பட்டவன் நானே. அவருடன் ஒரே கூரைக்குக் கீழே வாழ்வதே எனக்கு சிரமமாக இருந்தது.
வீட்டைவிட்டு வந்து என் வாழ்க்கையை நானே அமைத்துக்கொண்டு விட்ட பிறகும், வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அப்பா ரேடியோவுடன் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். டி.வி வந்த பிறகும் கூட நெடுநாள் அவர் ரேடியோதான் கேட்டுக்கொண்டிருந்தார். காலம் செல்லச் செல்ல அவரிடம் நான் கொண்டிருந்த இறுக்கம் தளர்ந்தது. ஆனால் அவர் சற்றும் மாறவில்லை. என்னை ஒரு சல்லிப்பயலாகவே அவர் எண்ணிவந்தார். என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள அவர் மறுத்தார். பல வருடங்கள் கழிந்து சென்னையில் நான் புதுவீடு வாங்கி குடிபுகுந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி நான் அவரை ஆத்மார்த்தமாக அழைத்தபோதும் அவர் மறுத்து விட்டார். எனக்கு குழந்தைகள் பிறக்காதபோது அதற்குக் காரணம் என்னுடைய பாவங்களே என்றும் எனக்கு அது வேண்டியதுதான் என்றும் சொன்னார். நான் தத்து எடுத்துக்கொண்ட குழந்தையை எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாக அங்கீகரிக்க மறுத்தார். அவரைப் பொறுத்தவரை அது அவரது ரத்தம் அல்ல. அவ்வளவுதான்.
சென்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி என் கடைசித்தம்பியின் திருமணநாள். நான் என் மகளுடன் முந்தினநாளே சென்று சேர்ந்தேன். என்னையும் என் மனைவியையும் கண்டதுமே என் அப்பா அருகே வந்து என் மகளை கையில் வாங்கி அணைத்து முத்தமிட்டார். நான் அதைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். அவர் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருந்தபோதிலும் அவரது கண்கள் ஈரமாக இருந்ததுபோல் தோன்றியது. என் கண்களைச் சந்திக்காமல் டிவி பேரொலி எழுப்பிக் கொண்டிருந்த அறைக்கு அவர் சென்றுவிட்டார்.
இரண்டுவாரம் கழித்து ஒருநாள் இரவு இரண்டரை மணிக்கு எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அப்பா இறந்துவிட்டார். நான் எங்கள் குடும்பவீட்டின் கூடத்துக்குள் நுழையும்போது அம்மாவும் என் தங்கையும் மற்ற உறவினர்களும் கதறி அழும் ஓசை அங்கே நிறைந்திருந்தது. என் மனம் மரத்திருந்தது. அப்பாவின் உறைந்த உடல் ஒரு குளிர்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. நான் அவரை நெருங்கி அந்த முகத்தைப் பார்த்தேன். எனக்கு பழக்கமான அந்த நிராகரிக்கும் சிரிப்பு உதடுகளில் பரவியிருக்கக் கண்டேன். ‘போடா புல்லே’ என்று சொல்வதைப்போல.
அவரது சவ அடக்கத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பங்கெடுத்தார்கள். கிராமமே அவருக்காக வருந்தியது. ஒரு மிகப்பெரிய இரங்கல் கூட்டம். அதில் அவரைப் புகழ்ந்து, அவர் அந்த கிராமத்துக்குச் செய்த நன்மைகளை பட்டியலிட்டு பலர் பேசினார்கள். வெளிநாட்டில் தன் வேலை இடத்துக்கு திரும்புவதற்கு முன்னர் என் தம்பி அப்பாவின் பெட்டியை உடைத்து திறந்தான். உள்ளே அதிகமாக ஒன்றும் இல்லை. பல மதிப்பில்லாத பொருட்களுடன் ஒரு பழைய பழுதடைந்த ரேடியோவும் இருந்தது.
இன்று, என் உயர்தொழில்நுட்ப இசைப்பெட்டியில், ‘உயிருடனிருக்கும் நாட்களில்’ என்ற பாடலைக் கேட்கிறேன்.
எல்லா தலைமுறையும்முந்தையதை பழி சொல்கின்றனஅந்த கசப்புகளெல்லாம்வந்து நம் கதவுகளை முட்டுகின்றன
என் அப்பா அருமையாக நினைத்த வற்றின்கைதிதான் நான் என்று அறிவேன்அவரது நம்பிக்கைகள், அச்சங்கள் ஆகியவற்றின் பிணைக்கைதி நான்
அப்பா இறந்த காலைநேரத்தில்நான் அங்கே இருக்கவில்லைஅவரிடம் சொல்லவேண்டியவற்றில் எதையும்நான் சொல்லவேயில்லை
உயிருடனிருந்த நாட்களிலேயே அவரிடம் சொல்லியிருக்கலாம்இறக்கும்போது மிகவும் தாமதமாகி விடுகிறது, ஒருநாளும் நாம் முகத்தோடுமுகம் பார்த்துக்கொள்ளவேயில்லை என்று உணர...*
புரிந்துகொள்ள முடியாத ஒரு கடும் துயரத்தால் இந்தப்பாடல் என்னை இறுக்குகிறது.
*The song, In the Living Years by the band Mike & Mechanics

2 comments:

madhavan manthram said...

Shaji anna,
This is madhu from neyveli,this is one of the very nice article from you, please add this one in the preface of both of your books , that will a kind of dedication to your dad, you indirectly encouraged to hear music,and it will show your real thirst of music to the music lovers, we always consider you as a GURU WHO TEACH US FOR LISTENING GOOD MUSIC AND GOOD SOUND.take care anna.

தமிழ்த்தென்றல் said...

இதைப் படித்து முடிக்கையில் என் கண்களில் நீர் வந்து எட்டிப்பார்த்தது உண்மைதான்.
அருமை. இத்தகைய நிலையை கேரளத்தின் ஓர் நெஞ்சம் நல்ல தமிழில் தந்திருக்கிறது. நன்றி ஷாஜி!

என் வாழ்க்கையுடன் ஒத்துப் போகிறது உங்கள் நினைவலைகள்.
நானும் உங்களைப் போன்றே சிறு வயதில் எங்கள் அப்பா வாங்கி வைத்திருந்த பலவித வானொலிப் பெட்டிகளின் பின்னாலேயே அலைந்தவன். பலவற்றை ஆர்வத்தில் கெடுத்துவிட்டு அப்பாவிடம் அடிவாங்கி வீட்டைவிட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன்.

என் வாழ்க்கை நினைவலைகளை மறு ஒலிபரப்புச் செய்த உங்கள் எழுத்துக்களுக்கு என் வந்தனம்.